ஞாயிறு, அக்டோபர் 30, 2011

பாமகவுக்கா ? அதிமுகவுக்கா ?


ஏகஇறைவனின் திருப்பெயரால்...
திருப்பெரும்புதூர் தொகுதி பாமகவுக்கா ? அதிமுகவுக்கா ?

சமீப காலமாக  ஜெயலலிதா அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி தொண்டர்களை உற்சாகப் படுத்தி வருவதை காண்கிறோம்.

செம்மொழி மாநாட்டை கோவையில் திமுக நடத்தி இனி கோவை நமதே ! என்று மார்தட்டிக் கொண்ட  அடுத்த சில நாட்களில் அதே கோவையில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநாடு போல் நடத்திக்காட்டி கோவை எங்கள் கோட்டை என்று மார்தட்டிக் கொண்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவாகட்டும், கருனாநிதியாகட்டும், எந்த காரணத்தைக் கூறி இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியை குறை கூறி ஆட்டப்பாட்டம் நடத்துவார்களோ அதேத் தவறை  இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் துணிந்து செய்வார்கள்.

ஆளும் கட்சியின் ஆட்சி காலம் முடியும் தருவாயில் தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடிக்க தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக எதிர் கட்சி நாளொரு மேனி பொழுதொரு வன்னம் என்று எதையாவது உப்பு சப்பில்லாதக் காரணத்தை கையிலெடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம், பேரணி என்று போக்குவரத்துக்கும். பொதுமக்களுக்கும் இடையூறு கொடுப்பார்கள்.

சில நேரத்தில் ஆளும் கட்சி கொண்டு வரும் நல்ல திட்டத்தை  இவர்களின் கட்சியை வளர்க்கும் சுயநலனிற்காக நடத்தும் ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் நலனிற்கு, அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகி விடும். இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருந்து இவர்களின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய முன் வர வேண்டும்இல்லை என்றால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது அநியாயமாக நாட்டின் வளர்ச்சியும், பொதுமக்களின் முன்னேற்றமும் பின்தங்கி விடும். 

சமீபத்தில் திருப்பெரும்புதூரில் அமையவிருக்கும் கிரீன்ஃபீல்டு நவீன விமான நிலைய திட்டத்தை ஜெயலிதாவும், ராமதாஸூம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது மிகவும் பிற்போக்குத் தனமான முடிவாகும்.

சென்னையில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைக்க திருவள்ளு}ர் மாவட்டம் திருபெரும்புதூர் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான அழுத்தம் திருபெரும்புதூரில் இருக்கிறதா ? என்று மண்பரிசோதனை நடந்து கொண்டிருப்பதைக் காட்டி உங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் அரசு கையகப்படுத்தவிருக்கிறது என்றுக்கூறி அதை சுற்றியுள்ள சுமார் 12 கிராமத்து மக்களை தூண்டிவிட்டு அதிமுகவின் திருத்தனி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் 25 பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருபெரும்புதூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி மனுக் கொடுத்துள்ளனர்.

இந்தப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதாக இருந்தால் இங்கு வசிக்கும் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்டு சம்மதித்தால் விமானநிலையம் அமைக்கலாம் மறுத்தால் கைவிட்டு விடவேண்டும் என்று மக்கள் எதிர்ப்பதை தெரிந்து கொண்டு ராமதாஸ் கூறுகிறார்.

சாதாரணமாக ஓரிடத்தில் சாலை விஸ்தீரணப் பணி நடந்தாலே சாலை ஓரங்களில் உள்ள கடைகள், வீடுகளை அப்புறப் படுத்த மறுக்கும் மனநிலை உள்ள மக்கள் வாழும் நாடு இந்தியா. 4821 ஏக்கர் நிலம் ஒதுக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பார்களா ? ஒத்துழைக்க மறுப்பதை தெரிந்து கொண்டே அவர்களை தூண்டி விடும் விஷமத்தனமான அறிக்கை.

மேலும் ஆலமாடி என்ற இடத்திற்கு விமான நிலையத்தை மாற்றலாம் என்றும் கூறுகிறார் சென்னையில் பல இடங்களை ஆய்வு செய்து அங்கெல்லாம் இதைவிட கூடுதலாக மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பதை அறிந்து தலைமைச் செயலகத்தில் கருனாநிதியுடைய தலைமையில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 4821 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இடத்திற்கு திருப்பெரும்புதூர் தான் சிறந்த இடம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதில் அதிமுக சார்பில் ஜெயக்குமாரும், பாமக சார்பில் ஜி.மணியும் கலந்து கொண்டுள்ளனர் அங்கு இவர்களின் பிரதிநிதிகள் யாரும் இது விஷயமாக எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

ஆக நாம் நினைத்த இடத்திலெல்லாம் ஏர்போட்டை அமைக்க முடியாது என்பதை நன்றாக அறிந்து கொண்டு அரசியல் லாபநோக்குடன் தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக நாட்டின் முக்கியமான வளர்ச்சிப் பணியைத் தடுக்கின்றனர்.

மேலும் அவர்கள் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்த 12 கிராம மக்களுடை வசிப்பிடங்கள் ஏர்போட் அமையவிருக்கும் எல்லைக்குள் வராது ஒரு சில வசிப்பிடங்கள் மட்டுமே கையகப்படுத்தப் வேண்டிய நிலை வரலாம் என்றே கூறுகின்றனர். அவ்வாறு கையகப்படுத்தியப் பின்னர் அவர்களுக்குத் தேவையான நிலங்களையும், போதுமான தொகையையும் நஷ்டஈடாக அரசு வழங்கவில்லை என்றால் போதுமானதை பெற்றுக் கொடுப்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதில் அர்த்தம் இருக்கலாம்.  மாறாக விமான நிலையம் வருவதற்கு முன்பே அவர்களை உசுப்பி விடுவது  வன்மையாக கன்டிக்;கப்பட வேண்டியதாகும். காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் விரிவாக்கப்பணி இன்றியமையாததாகும்.   

இவர்கள் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் வீரியமடைந்து மத்திய அரசின் கவனத்திற்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கான இந்த நல்லத் திட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற கலைஞரின் ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியை இப்பொழுதே தக்கவைத்துக் கொள்வதற்கான ஆயத்தப்பணியை பாமகவும், அதிமுகவும் தொடங்கி விடட்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: